தென்காசியில் சாரல் மழை: குற்றாலம் சீசனை எதிர்பார்த்து காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்
தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. எனவே குற்றாலம் சீசன் எப்போது தொடங்கும்? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.;
தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. எனவே குற்றாலம் சீசன் எப்போது தொடங்கும்? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
குற்றாலம் சீசன்
தென் தமிழகத்தில் மிகச்சிறந்த சுற்றுலா தலமான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும்.
இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவித்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள்.
சாரல் மழை
வழக்கமாக ஜூன் மாத முதல் வாரத்தில் அல்லது மே இறுதியிலேயே சீசன் தொடங்கும். இந்த ஆண்டுக்கான சீசன் இதுவரை தொடங்கவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
நேற்று காலை சுமார் 10.30 மணிக்கு தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. ஆனால் குற்றாலத்தில் இந்த மழை பெய்யவில்லை. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கார்மேகங்கள் சூழ்ந்துள்ளன. மழை பெய்தால் தான் அருவிகளில் தண்ணீர் வரும். இந்த ஆண்டு சீசன் தாமதமாக தொடங்கலாம் என தெரிகிறது.
சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. ஆனால் குற்றால சீசனுக்கான அறிகுறி இன்னும் தென்படவில்லை.
இதுகுறித்து குற்றாலத்தைச் சேர்ந்த சிலர் கூறுகையில், "சீசன் தொடங்க இன்னும் ஒரு வாரம் ஆகலாம்" என்றனர். ஆனாலும் குற்றால சீசனை சுற்றுலா பயணிகள் மற்றும் இங்குள்ள வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.