திருச்செந்தூர் முருகன் கோவிலில் சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.5,000 ஆக உயர்வு - இன்று முதல் அமல்

திருச்செந்தூரில் சண்முகார்ச்சனை நடத்துவதற்கு கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

Update: 2023-03-27 02:56 GMT

தூத்துக்குடி,

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடற்கரைக் கோவில் என்பதால் பக்தர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசித்துச் செல்கின்றனர். இந்த கோவிலில் சண்முகார்ச்சனை நடத்துவதற்கு கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப சண்முகார்ச்சனை கட்டணம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு தூத்துக்குடி மண்டல இணை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு திங்கள்கிழமை(இன்று) முதல் அமலுக்கு வருவதாக கோவில் இணை ஆணையர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கோவில் மூலம் சண்முகார்ச்சனை நடத்த கடந்த 8.11.1995-ம் ஆண்டு முதல் ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தற்போதைய சூழ்நிலை மற்றும் விலைவாசி ஏற்றத்திற்கேற்ப கோவில் மூலம் சண்முகார்ச்சனை செய்ய கட்டணம் ரூ.5 ஆயிரம் என உயர்த்தி சட்டவிதிகளின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து ஆட்சேபனை ஏதும் வரப்பெறாத நிலையில், கோவில் அறங்காவலர் குழு சுற்று தீர்மானத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

அதன்படி, கோவில் மூலம் சண்முகார்ச்சனை செய்ய கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.5,000 என உயர்த்தப்பட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் கோவில் நிர்வாகத்தால் அமல்படுத்தப்படுகிறது. ஆகவே, பக்தர்கள் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.5,000 கட்டணத்தை செலுத்தி சண்முகார்ச்சனை நேர்த்திக்கடன் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்