பாரம்பரிய உணவு பழக்கத்திற்கு மாற வேண்டும்

உடல் நல பிரச்சினையை போக்க பாரம்பரிய உணவு பழக்கத்திற்கு மாற வேண்டும் என கலெக்டர் வளர்மதி கூறினார்.

Update: 2023-04-06 18:50 GMT

உணவுத் திருவிழா

தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 வட்டாரங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் ஊட்டச்சத்து உணவு திருவிழா வட்டார அளவில் நடத்தப்பட்டது. முதல் மூன்று இடங்களை பிடித்த மொத்தம் 21 மகளிர் சுய உதவி குழுக்களின் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு திருவிழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் பாரம்பரிய உணவுகளை பார்வையிட்டு, சாப்பிட்டு மகிழ்ந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஊட்டச்சத்து பற்றாக்குறை

ஒவ்வொரு மகளிர் குழுவும் சுயமாக தொழில் முனைவோராக மாறவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் அதிகப்படியான வங்கி கடனுதவிகளை வழங்கி வருகின்றார். அதனை பயன்படுத்தி மென்மேலும் படிப்படியாக வளர வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமிரி வட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

ஊட்டச்சத்து பற்றாக்குறையினை களைய துரித உணவுகளை தவிர்த்து, இயற்கை உணவுமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கும் இது குறித்து இளம் வயதிலேயே பழக்கப் படுத்த வேண்டும். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பலவித இயற்கை உணவுகளை நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மேலும் இந்த ஊட்டச்சத்து உணவுகள் குறித்து உங்கள் அருகாமையில் வசிக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பாரம்பரிய உணவு

சரியான உணவு பழக்க வழக்கம் இல்லாத காரணத்தினால் நம்மில் பலர் உடல் பருமன், தைராய்டு, மலட்டுத் தன்மை, கர்ப்பப்பை கோளாறு போன்ற உடல் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றோம். இவற்றிலிருந்து நம்மை பாதுகாக்க நம் பாரம்பரிய உணவு பழக்கங்களுக்கு மாறவேண்டும். நல்ல தரமான, ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் போது சமுதாயத்தில் அதனை வாங்குவதற்காக ஏராளமான நபர்கள் உள்ளனர். உணவுப் பொருட்களை தயாரிக்கும் போது தரத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அதில் எவ்வித குறையும் வைக்க கூடாது. மகளிர் குழுக்கள் இது போன்ற ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்தால் மேன்மேலும் வளர ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

நம் முன்னோர்கள் வகுத்த ஒவ்வொரு நியதிகளுக்கும் ஒரு அறிவியல் பூர்வமான காரணம் இருக்கும். அதனை நாம் உணர்ந்து நம் வாழ்க்கையில் பின்பற்றி அதனை குழந்தைகளுக்கும் சொல்லித் தர வேண்டும். சிறுதானியங்கள், இயற்கை பழ வகைகள், கீரைகள், காய்கறிகள் போன்றவற்றின் மூலம் இயற்கையாக தயாரிக்கப்படும் உணவு பழக்க வழக்கங்களை நாம் கடைபிடித்து ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக அமைய அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், ஊட்டச்சத்து உணவு நிபுணர் ஸ்ரீமதி ஜானு, உதவி மகளிர் திட்ட அலுவலர் சுபாஷ் மற்றும் சுயஉதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்