முழுநேர விவசாய பணிக்கு மாற்றி அமைக்க வேண்டும்

திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தை முழுநேர விவசாய பணிக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2023-07-01 00:15 IST

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து தோட்டக்கலைத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் காய்கறி நாற்றுக்களை கலெக்டர் வழங்கினார். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர்.

விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி: பருத்திக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. மேலும் அதற்கான கொள்முதல் விலை குறைந்துள்ளது. எனவே பருத்தியை இந்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்தால் போட்டி ஏற்பட்டு, விலை உயர்வு ஏற்படும். தக்காளியை போலவே அரசு தேங்காயை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் வாயிலாக விற்பனை செய்ய வேண்டும்.

ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம்: பாப்பன் வாய்க்கால் உள்பட அனைத்து வாய்க்கால்களையும் சர்வே செய்து தூர்வார வேண்டும்.

தண்ணீர் வந்து சேரவில்லை

விவசாயி சந்தானம்: அதிவீர்ராமன் வாய்க்கால் தூர்வாரியும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் கோட்டூர், திருத்துறைப்பூண்டி பகுதியில் நேரடி நெல் விதைப்பு செய்த வயல்களில் விதை நெல் எந்த நிலையில் இருக்கிறது என்பது புரியவில்லை.

விவசாயி பாலகுமாரன்: விவசாயத்தில் நடவு, களையெடுக்க, பருத்தி பஞ்சு எடுக்க ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே 100 நாள் வேலைத்திட்டத்தை முழுநேர விவசாய பணிக்கு மாற்றி அமைக்க வேண்டும்.

விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன்: சவளக்காரன் பகுதி பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. இந்த பகுதியில் குடிநீர் உப்பாக உள்ளதால் இதை பயன்படுத்துவோருக்கு உடல்ரீதியாக நோய்கள் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான சிறப்பு நகைகடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கள்ளுக்கடை திறக்க வேண்டும்

விவசாயி செல்வராஜ்: தமிழகத்தில் தேங்காய் உற்பத்தியும், விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. தென்னை விவசாயத்தை காக்க வேண்டுமெனில் கள் இறக்க அனுமதித்து தமிழகம் முழுவதிலும் கள்ளுக்கடை திறக்க அரசு உத்தரவிட வேண்டும்.

விவசாயி பஞ்சநாதன்: வேளாண்மை பொறியியல் துறையில் விவசாய பணிகளுக்கு தேவையான வேளாண் எந்திரங்களை கூடுதலாக பெற்று வழங்க வேண்டும். நெல் கொள்முதல் களங்களை சீரமைக்க வேண்டும். குறுவைக்கு காப்பீடு அறிவிக்க வேண்டும். நீடாமங்கலம் பகுதிக்கு தொகுப்பு வீடுகள் கூடுதலாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் (மாநில திட்டம்) லட்சுமி காந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்