ரியல் எஸ்டேட் அதிபர்கள் கடத்தல் வழக்கு பாகலூருக்கு மாற்றம்
ஓசூர் அருகே ரூ.15 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர்களை காரில் கடத்திய வழக்கு பாகலூர் போலீசுக்கு மாற்றப்பட்டது.
ஓசூர்
ஓசூர் அருகே ரூ.15 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர்களை காரில் கடத்திய வழக்கு பாகலூர் போலீசுக்கு மாற்றப்பட்டது.
ரியல் எஸ்டேட் அதிபர்கள்
சேலம் குகை ஆண்டிப்பட்டி ஏரித்தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கரன் (வயது 45). இவரது சகோதரர் கவுரிசங்கரன் (42). ரியல் எஸ்டேட் அதிபர்கள். இவர்களை கடந்த 29-6-2022 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி என்கிற சத்யராஜ், செல்வகுமார், பன்னீர்செல்வம் உள்பட சிலர் தொடர்பு கொண்டனர்.
அவர்களிடம் பாகலூர் சுற்று வட்டார பகுதிகளில் குறைந்த விலையில் வீட்டுமனைகள் இருப்பதாகவும், அதை பார்க்க வருமாறு அந்த நபர்கள் கூறினர். அதை நம்பி விஜயபாஸ்கரன், கவுரிசங்கரன் ஆகியோர் காரில் பாகலூர் வந்தனர். அவர்களுடன் சக்தியும், பன்னீர்செல்வமும் உடன் வந்தனர். பாகலூர் அருகே நல்லூரில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் அவர்கள் இருந்த போது, அங்கு 10 பேர் 2 கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிளில் வந்தனர்.
ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்
அவர்கள் திடீரென்று விஜயபாஸ்கரனையும், அவரது சகோதரரையும் தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர். அவர்களுடன் வந்த நபர் விஜயபாஸ்கரனின் காரை எடுத்து சென்றார். பின்னர் அந்த நபர்கள், அண்ணன், தம்பி 2 பேரையும் கட்டையால் தாக்கி கொலை செய்ய முயன்றனர். தொடர்ந்து அவர்கள் ரூ.15 லட்சம் கொடுத்தால் 2 பேரையும் விட்டு விடுகிறோம் எனக் கூறினர்.
ஆனால், தங்களால் அவ்வளவு பணம் தர முடியாது என இருவரும் கூறவே, வெற்று பத்திரங்களில் அந்த நபர்கள் கையெழுத்து வாங்கி கொண்டு அண்ணன், தம்பி 2 பேரையும் சேலம் மாவட்டம் கருப்பூர் சுங்கச்சாவடி அருகில் இறக்கி விட்டு சென்று விட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 தங்க சங்கிலிகள், ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை அந்த நபர்கள் பறித்து சென்றனர்.
பாகலூருக்கு வழக்கு மாற்றம்
இது தொடர்பாக விஜயபாஸ்கரன் கருப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே கடத்தல் சம்பவம் நடந்தது பாகலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் வழக்கு பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டது.
இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி, கொலை முயற்சி, மோசடி, கடத்தல், வழிப்பறி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சக்தி, செல்வகுமார், பன்னீர்செல்வம் மற்றும் சிலரை வலைவீசி தேடி வருகிறார்கள்.