21 உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்: சென்னை-மதுரையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் - தென்காசி, தஞ்சைக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டுகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் 21 உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று மாற்றப்பட்டனர். சென்னை- மதுரையில் புதிய துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர். தென்காசி, தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டுகள் பதவி ஏற்கிறார்கள்.

Update: 2023-01-11 20:27 GMT

பதவி உயர்வை அடிப்படையாக வைத்தும், காலி பணியிடங்களை நிரப்பவும், உயர் போலீஸ் அதிகாரிகளை அரசு இடமாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 45 உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். நேற்று மீண்டும் 21 உயர் போலீஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நேற்றைய மாறுதல் பட்டியலில் 7 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், பதவி உயர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

1. கருணாசாகர்- டெல்லியில் மத்திய அரசு பணியில் இருந்த டி.ஜி.பி. கருணாசாகர், தமிழக நலப்பிரிவு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

2. சைலேஸ்குமார் யாதவ்- தமிழக நலப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றிய இவர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

3. ரோகித்நாதன் ராஜகோபால்- சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனராக பணியாற்றிய இவர், அண்ணா நகர் துணை கமிஷனராக பணி நியமனம் செய்யப்பட்டார். கடந்த முறை நடந்த மாறுதல் பட்டியலில்தான் இவர் மயிலாப்பூர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 .மேகலினா ஐடன்- மாநில குற்ற ஆவண காப்பக சூப்பிரண்டாக உள்ள இவர், பொருளாதார குற்றப்பிரிவு தென் மண்டல சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

5. வனிதா-மதுரை நகர தலைமையிட துணை கமிஷனராக பதவி வகிக்கும் இவர், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

6. ராதாகிருஷ்ணன்- சேலம் நகர தலைமையிட துணை கமிஷனராக பணியாற்றிய இவர், சென்னை தலைமையிட துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

7. சாம்சன்- காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் இவர், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

8. செந்தில்குமார்- தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இவர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, சென்னை அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

9. எஸ்.எஸ்.மகேஷ்வரன்- சென்னை அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

10. ஆசிஷ்ராவத்- காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். இவர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

11. முத்தரசி- தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டிருந்தார். அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக இவர் பணியாற்றுவார்.

12. செல்வராஜ்- சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக இருந்த இவர், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

13. மனோகர்- சென்னை தலைமையிட டி.ஐ.ஜி.யாக பணியில் உள்ள இவர், சென்னை மேற்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

14. அபிஷேக் தீட்சித்- டி.ஐ.ஜி.யான இவர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். சென்னை தலைமையிட டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

15. ஆன்கித் ஜெயின்- விருதாச்சலம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு மத்திய மண்டல சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

16. ராஜத்சதுர்வேதி- நெல்லை மாவட்டம் நாங்குனேரி உதவி போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

17. ஸ்ரேயா குப்தா- தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்றுள்ளார். மாநில குற்ற ஆவண காப்பக சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

18. அபிஷேக் குப்தா- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று திருப்பூர் வடக்கு துணை கமிஷனராக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

19. கவுதம் கோயல்- ஈரோடு மாவட்டம் பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்றுள்ளார். மதுரை நகர தலைமையிட துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

20. பி.கே.அர்விந்த்- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். மதுரை நகர வடக்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்.

21. அருண் கபிலன்- திண்டுக்கல் புறநகர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று, சென்னை தியாகராயநகர் துணை கமிஷனராக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்