சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின் அதிமுக உறுப்பினர் அட்டையில் மாற்றம்...!

ஓபிஎஸ் நீக்கப்பட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருக்கும் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2023-03-14 11:19 GMT
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின் அதிமுக உறுப்பினர் அட்டையில் மாற்றம்...!

சென்னை,

அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை மோதலைத் தொடர்ந்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார்.

இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடிய நிலையில், பல மாதங்களாக நடந்த வழக்கைத் தொடர்ந்து சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு ஓபிஎஸ் தீர்வு பெறலாம் என உத்தரவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியடைந்தார்.

இந்தநிலையில், அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களுடன் வடிவமைக்கப்பட்டு புதிய அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய அட்டைகளை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க சென்னை புறநகர் மாவட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நடந்தது.

' மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி உறுப்பினர் அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் கூறும்போது, 'இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றுள்ள அனைத்து கழக உறுப்பினர்களுக்கும் மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் அட்டை வழங்கப்படுகிறது' என்றார்.

முன்பு ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் இணைந்திருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டிருந்த நிலையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மட்டும் உள்ள உறுப்பினர் அட்டைகளை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்குவது பற்றி மா.செக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்