சென்னையில் அடுத்த 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

கோவை மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-09-09 08:22 GMT

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 9-ந்தேதி(இன்று) மற்றும் 10-ந்தேதி(நாளை) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அதே போல் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், வடக்கு கேரளா-கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் காற்று மணிக்கு சுமார் 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மேற்கண்ட இடங்களில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்