தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1.தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
2. தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
3. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 6-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் 7-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 8-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். என்று கூறியுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, திருப்பூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.