சென்னை உட்பட 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. இது நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், வட தமிழக மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.