தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக இன்று (திங்கட்கிழமை) வலுவடைகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் நாளை மறுதினம் (புதன்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Update: 2023-01-30 00:27 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்ததும், பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது. பனியின் தாக்கமும் சில இடங்களில் காணப்பட்டு வருகிறது. இடையில் சில இடங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் லேசானது முதல் மிதமான மழையும் பெய்துள்ளது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது.

தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) வலுவடைகிறது. பின்னர் நாளை மறுதினம் (புதன்கிழமை) இலங்கை கடற்பகுதிகளில் சென்றடையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் கனமழை

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுதினம் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதற்கு அடுத்த நாள் (வியாழக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கை கடற்கரையையொட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்றும், தென்மேற்கு வங்க கடல், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார்வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்