மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சங்கிலி பறிக்க முயன்ற பெண் கைது
பட்டுக்கோட்டையில் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சங்கிலி பறிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.;
பட்டுக்கோட்டையில் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சங்கிலி பறிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
தனியாக இருந்த மூதாட்டி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரம் லெட்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மனைவி லட்சுமி (வயது80). இவருடைய மகள் பட்டுக்கோட்டை கலால் போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை மூதாட்டி லட்சுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகள் கார்த்திகா (வயது22) என்பவர் முகத்தில் கர்ச்சிப்பை கட்டி மறைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.
மிளகாய் பொடி தூவினார்
சத்தம் கேட்டு லெட்சுமி யார்? என்று கேட்டார். உடனே கார்த்திகா அவருடைய முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவருடைய கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத மூதாட்டி லட்சுமி, கார்த்திகாவை பிடித்து கொண்டு கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கார்த்திகாவை பிடித்து வைத்துக்கொண்டு பட்டுக்கோட்டை நகர போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று கார்த்திகாவிடம் விசாரித்தனர்.
கடன் பிரச்சினையை சரிசெய்ய...
விசாரணையில் கார்த்திகா கடன் பிரச்சினையில் தவித்து வந்ததாகவும் அதை சரி செய்ய வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி லட்சுமியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலியை பறிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகாவை கைது செய்து, பட்டுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.