இ-சேவை மையங்கள் மூலம் மக்களுக்கு சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்

இ-சேவை மையங்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், சேவைகளை காலதாமதமின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

Update: 2022-06-18 16:55 GMT

தர்மபுரி:

இ-சேவை மையங்கள் மூலம் மக்களுக்கு சான்றிதழ்கள், சேவைகளை காலதாமதமின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

திடீர் ஆய்வு

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மையத்தில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு நடத்தினார். இ-சேவை மையங்களில் பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் அரசின் சேவைகளுக்கு விண்ணப்பங்களை அளிக்கும்போது அந்த விண்ணப்பத்துடன் எத்தகைய ஆவணங்களை இணைக்க வேண்டும். அவை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் சாந்தி கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 439 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களின் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்கள், சேவைகளை காலதாமதமின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும். உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் கோரிக்கைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி அவற்றை காலதாமதமின்றி உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.

பார்வைக்கு வைக்க வேண்டும்

தகுதியான கோரிக்கைகள் நீண்ட நாட்களுக்கு நிலுவையில் இருக்க கூடாது. அதை அலுவலர்கள் உறுதி செய்து, உடனுக்குடன் உரிய தீர்வுகளை வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பதாரர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் எவ்வகை சேவைக்கு விண்ணப்பத்துடன் என்னென்ன? ஆவணங்களை இணைக்க வேண்டும் என்ற விவரங்களை உடனடியாக பார்வைக்கு வைக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தார் அருண் பிரசாத், தாசில்தார் ராஜராஜன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்