சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டு சான்று; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடியில் நடந்த உலக மருத்துவர் தின விழாவில், சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு சான்று வழங்கினார்.

Update: 2022-07-02 17:03 GMT

 தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக மருத்துவர்கள் தின விழா தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் வரவேற்றார். விழாவில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறந்த மருத்துவர்களுக்கு பாராட்டு சான்று கேடயம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவப்பணி என்பது சாதாரணமானது இல்லை. அது அர்ப்பணிப்புடன் செய்யப்படுவது என்று உலகம் முழுவதும் சொல்லப்படுகிறது. இந்த மருத்துவ பணி எண்பது ஒரு அறப்பணி ஆகும். சேவை மனப்பான்மை இருந்தால் மட்டுமே இந்த பணியை தேர்ந்தெடுக்க முடியும். சேவை மனப்பான்மை எண்ணம் எல்லா மருத்துவரிடம் மறைந்து இருக்கும். எல்லோராலும் மருத்துவ பணி செய்ய முடியாது. மருத்துவப்பணிக்கு வருபவர்கள் சேவை மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இருந்தால் தான் அவர்கள் சிறப்பாக பணியாற்ற முடியும்.

மக்களின் உயிர்காக்கும் பணியில் மருத்துவர்கள் 24 மணிநேரமும் ஓய்வின்றி பணியாற்றுகின்றனர். தற்போது மருத்துவ தேவை அதிகரித்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் கோவில்பட்டி மருத்துவமனையானது அனைத்து நவீன மருத்துவ வசதிகளுடனும், தூய்மையுடனும் அனைவரும் பாராட்டும் வகையில் இருக்கிறது. இது எங்களுக்கு கிடைத்த பெருமையாகும். தமிழக அரசு மருத்துவ துறைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதனால் தமிழகம் மருத்துவத்துறையில் வெகுவாக முன்னேற்றம் அடைந்து வருகிறது.

மருத்துவ படிப்பு படிப்பதற்கு பல மாணவர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நீட் தேர்வினால் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுகிறது. நீட் தேர்வு பற்றி இருதரப்பு கருத்து இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்வதற்கு மருத்துவம் படித்தே ஆவேன் என்று கூறும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை தர வேண்டும் என்ற காரணத்தினால் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளர் குமரன், கோவில்பட்டி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜா ஆகியோர் மருத்துவர்களின் சேவைகள் குறித்து எடுத்துரைத்தனர். விழாவில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குனர் முருகவேல் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்