நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 50 பேருக்கு பாராட்டு சான்றிதழ்-கலெக்டர் வழங்கினார்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு 50 பேருக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Update: 2023-06-14 19:00 GMT

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு 50 பேருக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

குருதிக்கொடையாளர் தினம்

உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடந்தது. இதில் 150 நர்சிங் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரத்ததானம் வழங்குவது குறித்த உறுதிமொழியினை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து ரத்த தான கொடையாளர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

முன்வரவேண்டும்

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கூறும்போது, "நெல்லை மாவட்டத்தில் தேவைக்கு அதிகமாகவே தன்னார்வலர்கள் மூலம் ரத்த தானம் கிடைத்துள்ளது. ரத்த வங்கியில் கடந்த 2022-ம் ஆண்டில் முதல் முறையாக 10 ஆயிரம் ரத்த அலகுகளுக்கு மேல் சேகரிக்கப்பட்டு ஏறக்குறைய 22 ஆயிரம் ரத்தக்கூறுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மக்களுக்கு அளிக்கப்பட்டது. இதுபோன்று மாவட்டத்தில் குருதி கொடையாளர்கள் பல்வேறு சிகிச்சை மேற்கொள்பவர்களின் உயிர்களை காப்பாற்ற ரத்தம் கொடுக்க தொடர்ந்து முன்வர வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், முதல்வர் ரேவதி, மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்