பெரியகுளம் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

பெரியகுளம் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2022-11-30 17:32 GMT

பெரியகுளம் நகராட்சி கூட்டம், அதன் தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் புனிதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொறியாளர் சண்முகவடிவு, சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, சேகர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அ.தி.மு.க. நகராட்சி குழுத்தலைவர் ஓ.சண்முகசுந்தரம் பேசும்போது, பெரியகுளத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வேண்டும். அம்மா உணவகத்திற்கு தேவையான மின்விளக்குகள், மின்விசிறிகள், இருக்கைகள், இரும்பு அடுப்புகளை வழங்க வேண்டும். பெரியகுளம் நகரில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தற்போது அவற்றில் பெரும்பாலான கேமராக்கள் பழுதடைந்து உள்ளன. எனவே அவற்றை சரிசெய்ய வேண்டும். வெறிநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

'குப்பை இல்லாத நகராட்சி' என்ற இலக்கை நோக்கி முதற்கட்டமாக ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்கும் வகையில் கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சில்வர் டம்ளர், தட்டுகள், தண்ணீர் மற்றும் தேநீர் அருந்தும் குவளைகள் பயன்படுத்தப்பட்டது. கூட்டம் முடிவில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்கி சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்