இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், அங்கக சான்று பெற விண்ணப்பிக்கலாம்-உதவி இயக்குனர் தகவல்

Update: 2022-12-21 18:45 GMT

தர்மபுரி:

இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்கக சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் ஜெயமாலா தெரிவித்துள்ளார்.

அங்கக சான்று

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் அவற்றின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும், கூடுதல் விலையும் கிடைக்கிறது. அங்கக முறையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் சந்தைப்படுத்துதலை ஊக்குவிப்பதற்காக தமிழகத்தில் அங்கக சான்றளிப்பு துறை செயல்பட்டு வருகிறது.

இயற்கை வழி வேளாண்மை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆவணங்களுடன்

அங்கக சான்று பெற விவசாயிகள் உரிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பண்ணையின் பொது விவர குறிப்பு, பண்ணையின் வரைபடம், ஆண்டு பயிர் திட்டம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விவரம், துறையுடனான ஒப்பந்தம், நில ஆவணம், நிரந்தர கணக்கு எண், ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

சான்று கட்டணமாக தனிநபர் மற்றும் சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.2,700-ம், பிற விவசாயிகளுக்கு ரூ.3,200-ம், விவசாய குழுவிற்கு ரூ.7,200-ம், வணிக நிறுவனங்களுக்கு ரூ.9,400-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கக வேளாண்மையில் ஈடுபடும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்