மாணவியின் சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும்

மாணவியின் சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-08-11 20:56 GMT


விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சங்கீதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங் படித்தேன். குடும்ப சூழ்நிலையின் காரணமாக படிப்பை தொடர முடியவில்லை. பின்னர் கல்லூரியில் அளித்த பள்ளி மாற்றுச்சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை தர கல்லூரி நிர்வாகம் மறுத்தது. எனது கல்விச்சான்றிதழ்களை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கல்லூரி சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் பெற்ற கல்வி உதவித்தொகையை செலுத்தவில்லை. அதனால் தான் கல்விச்சான்றிதழ்களை ஒப்படைக்கப்படவில்லை என தெரிவித்தார். விசாரணை முடிவில், உதவித்தொகையை திரும்ப பெற சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால் கல்விச்சான்றிதழ்களை தர மறுப்பது ஏற்கத்தக்கதல்ல. மாணவியின் கல்விச்சான்றிதழை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்