காரைக்குடி
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோவிலில் விசாக விழா நடைபெற்றது. அதனையொட்டி காலையில் கோவிலிலிருந்து சண்முகநாதப் பெருமான் வெட்டிவேர் திருக்கோலத்துடன் ஆதீன திருமட கொலுமண்டபத்தில் எழுந்தருளினார். திருமடத்தின் வாசலில் ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வரவேற்றார். பின் திருமுழுக்காட்டல், பச்சை சாத்துப்படி பூஜைகள் நடைபெற்றன. நாதஸ்வர இன்னிசை நடைபெற்றது. தொடர்ந்து ஆதீனத் திருமடத்தின் சார்பில் பாராட்டு விழா நடை பெற்றது. விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையுரை நிகழ்த்தினார். சேதுபதி வரவேற்றார். விழாவில் சிங்கப்பூர் வாழ் லட்சுமிக்கு செந்தமிழ் திலகம் எனும் பட்டத்தையும், கவிஞர் அரு நாகப்பனுக்கு கவிஞர் கோ எனும் பட்டத்தையும், குன்றக்குடி அடிகளார் வழங்கினார். பின் தேவகோட்டை இசைமணி முத்தையா தேசிகருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. பட்டம் பெற்றவர்களையும், பரிசு பெற்றவர்களையும் முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி சொக்கலிங்கம் பாராட்டினார். இரவு தேவார திருமுறை இன்னிசை நடைபெற்றது. இரவு 10 மணியளவில் சண்முகநாதப் பெருமான் வெள்ளிரதத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.