செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்

சென்னை-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேர மாற்றம் 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

Update: 2023-03-31 20:26 GMT

சென்னை-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேர மாற்றம் 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

மின்சார ரெயில்கள்

மதுரை-நெல்லை இடையே முழுமையாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நெல்லை-திருச்செந்தூர் இடையே ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், தண்டவாளம் பலப்படுத்தப்பட்டு, மின்மயமாக்கலும் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து நெல்லை -திருச்செந்தூர் இடையே டீசல் என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டு வந்த ரெயில்கள், மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.

பயண நேரம் குறைப்பு

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் (சனிக்கிழமை) நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று முதல் ரெயில்களின் கால அட்டவணை மாற்றி இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16105) நெல்லை சந்திப்புக்கு காலை 5.55 மணிக்கு வந்து 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, முன்னதாக அதாவது காலை 4.55 மணிக்கு வந்து 5 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் செய்துங்கநல்லூருக்கு 5.17 மணிக்கு வந்து 5.18 மணிக்கு புறப்படுகிறது. ஸ்ரீவைகுண்டத்துக்கு 5.31 மணிக்கு வந்து 5.32 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

இதேபோல, நாசரேத்துக்கு 5.42 மணிக்கு வந்து 5.43 மணிக்கும், குரும்பூருக்கு 5.49 மணிக்கு வந்து 5.50 மணிக்கும், ஆறுமுகநேரிக்கு 5.55 மணிக்கு வந்து 5.56 மணிக்கும், காயல்பட்டினத்துக்கு 5.59 மணிக்கு வந்து 6 மணிக்கும் புறப்படும். திருச்செந்தூருக்கு காலை 8 மணிக்கு செல்வதற்கு பதிலாக காலை 6.50 மணிக்கு சென்றடைகிறது. இதன்மூலமாக பயணிகளுக்கு 1 மணி நேரம் 10 நிமிடம் பயண நேரம் குறையும்.

இதேபோல, திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16106) இரவு 7.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 8.10 மணிக்கு புறப்படும். காயல்பட்டினத்துக்கு 8.17 மணிக்கு வந்து 8.18 மணிக்கும், ஆறுமுகநேரிக்கு 8.20 மணிக்கு வந்து 8.21 மணிக்கும், குரும்பூருக்கு 8.26 மணிக்கு வந்து 8.27 மணிக்கும், நாசரேத்துக்கு 8.35 மணிக்கு வந்து 8.36 மணிக்கும், ஸ்ரீவைகுண்டத்துக்கு 8.45 மணிக்கு வந்து, 8.46 மணிக்கும், செய்துங்கநல்லூருக்கு 8.54 மணிக்கு வந்து 8.55 மணிக்கும், நெல்லை சந்திப்புக்கு 9.10 மணிக்கு வந்து 9.15 மணிக்கும் புறப்பட்டு செல்கிறது. இதன்மூலம் ஒரு மணி நேரம் வேகப்படுத்தப்பட்டு உள்ளது.

பாலக்காடு ரெயில்

இதுதவிர பாலக்காடு - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (எண்: 16731) 30 நிமிடம் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், நெல்லை - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ரெயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு, புறப்பாடு மற்றும் வருகை நேரமும் மாற்றப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்