'அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகளை மத்திய அரசு குறை சொல்கிறது' - ஜவாஹிருல்லா கண்டனம்

தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கை பாரபட்சமானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என ஜவாஹ்ஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-28 14:43 GMT

சென்னை,

அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளைக் குறை சொல்வது போன்ற செயல்களில், மத்திய அரசு மறைமுகமாக ஈடுபடுகிறது என மனித நேய மக்கள் கட்சியின் தலைவரான ஜவாஹ்ஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழக அரசுக்குச் சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தைத் தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது, ஓரவஞ்சனையானது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகைப் பதிவேட்டுக் கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு படக்கருவிகள் சரியாகச் செயல்படாதது ஆகியவை தான் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம், இந்திய மருத்துவ ஆணையத்திற்கு விளக்கமளித்துள்ளது. ஆனால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்து, மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் சென்றிருப்பது தமிழகத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்புணர்வை வெளிக்காட்டி இருப்பதாகத் தெரிகிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியும் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் மருத்துவக்கல்லூரியும் மருத்துவத் துறையில் மிகவும் பழமை வாய்ந்தவை மட்டுமல்ல பல்வேறு சாதனைகளை படைத்த கல்லூரிகள். நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளைக் குறை சொல்வது போன்ற செயல்களில், மத்திய அரசு மறைமுகமாக ஈடுபடுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் இந்த அறிவிப்பானது இந்த கல்லூரியில் நிரப்பப்பட வேண்டிய 500 இடங்களில் சேரும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே, தமிழக அரசு கவனத்துடன் இந்த விஷயத்தை அணுகி மாணவர்களின் நலனைக் காப்பதில் முயற்சி மேற்கொள்ள வேண்டும்."

இவ்வாறு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்