மின் ஊழியர் மத்திய அமைப்பினர் மறியல் போராட்டம்
ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மறியல் போராட்டம்
மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.
அதன்படி திருவண்ணாமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை - போளூர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாநில செயலாளர் காங்கேயன் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர்கள் அருள்தாஸ், மாரிமுத்து, ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாரி, மண்டல செயலாளர் சிவராஜ், வட்டச் செயலாளர் பாலாஜி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்து பேசினர்.
பணி நிரந்தரம்
அப்போது தானே, வர்தா, கஜா, ஒக்கி, புயல் பாதிப்பின் போது இரவு பகலாக பணிபுரிந்து மின்சார வாரியத்தை தலை நிமிர வைத்த ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசும், வாரியமும் அறிவித்தபடி தினக்கூலி ரூ.380 அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கி உடனடியாக பணி நிரந்தம் செய்ய வேண்டும்.
கே2 மற்றும் சிட் அக்ரிமெண்டில் பல ஆண்டு காலமாக பணி செய்த ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு காலியாக உள்ள பணியிடங்களில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
10 ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்ற தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
ஊதிய உயர்வு, வேலைப்பளு பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
100 பேர் கைது
இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மறியல் போராட்டத்தினால் போளூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.