கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னத்துக்கு, மத்திய அரசு முதற்கட்ட அனுமதி

சென்னை மெரினாவில் கடலின் நடுவே அமைக்கப்பட உள்ள கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னத்துக்கு, மத்திய அரசு முதல் கட்ட அனுமதியை வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.;

Update:2022-09-17 00:10 IST

சென்னை,

தமிழ் இலக்கியத்துக்கு, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அளித்த பங்களிப்பினை நினைவுக்கூறும் வகையில் வங்கக்கடலின் நடுவே 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா' நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி பயன்படுத்திய பேனா போன்ற 'ராட்சத பேனா' வான் நோக்கி செங்குத்தாக நிறுத்தப்படுகிறது. ரூ.80 கோடியில் அமைக்கப்பட உள்ள இந்த நினைவுச்சின்னம் கடல் மட்டத்தில் இருந்து 42 மீட்டர் உயரத்தில் அமைய இருக்கிறது.

இது கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை விடவும் சற்று உயரமானதாக இருக்கும். பேனா நினைவுச்சின்னத்துக்கு செல்வதற்கு, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தின் பின்புறத்தில் இருந்து, தரை தளத்திலும், கடல் மட்டத்தின் உயரேயும் என 650 மீட்டர் நீளத்தில் 7 மீட்டர் அகலத்தில் இரும்பு பாலத்தில், கண்ணாடியிலான பாதை அமைக்கப்படுகிறது. அதில், பார்வையாளர்களை ஏற்றிச் செல்வதற்காக சிறிய ரக வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

முதல் கட்ட அனுமதி

பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. நினைவுச்சின்னம் அமைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் கீழ் வருகிறது. இதையடுத்து தமிழக அரசு இந்த திட்டம் தொடர்பான முன்மொழிவினை ஒப்புதலுக்காக, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதன் தொடர்ச்சியாக, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம், காணொலிக்காட்சி மூலமாக தமிழக அரசு விவரித்தது.

இதையடுத்து, பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு, நிபந்தனைகளுடன் கூடிய முதற் கட்ட அனுமதியை தமிழக அரசுக்கு, மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு வழங்கியுள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை, பேரிடர் மேலாண்மை திட்டத்தின்படி இடர் மதிப்பீட்டு அறிக்கை, பொதுமக்களிடம் கருத்து கேட்பு மற்றும் அந்த திட்டம் தொடர்பான பிற ஆவணங்களை மாநில அரசு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

நிபுணர் குழு

மாநில அரசு அந்த ஆவணங்கள் தொடர்பாக எழுப்பப்படும் விவகாரங்களை நிவர்த்தி செய்து, தனது இறுதி அறிக்கையை மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவேண்டும். அதனை மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்து, தனது பரிந்துரையை மத்திய அமைச்சகத்துக்கு அனுப்பும். இதையடுத்து நினைவுச்சின்னம் அமைப்பதற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணைய ஒப்புதல் வழங்குவதை மத்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரைக்க உள்ளது.

கருணாநிதி தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதும்போது, தொடக்கத்தில் 'உடன்பிறப்பே' என்று அன்போடு குறிப்பிடுவது வழக்கம். இதுதவிர ஏராளமான புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பேனாவுடன் அவருக்கு இருந்த பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது, அவர் பயன்படுத்திய பேனாவும் உடன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சத்ரபதி சிவாஜி

சென்னையில், வங்கக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க உள்ளது போன்று, மாமன்னர் சத்ரபதி சிவாஜிக்கு, மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள அரபிக்கடலின் நடுவே பிரமாண்ட சிலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு சமீபத்தில் மராட்டிய அரசுக்கு, கடலோர ஒழுங்குமுறை மண்டலம் ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோலவே கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னத்துக்கும் அடுத்தக்கட்ட பணிகளை தொடங்குவதற்கு, விரைவில் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திடம் இருந்து ஒப்புதல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடம் தேர்வு செய்யப்பட்டது எப்படி?

பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் திட்டத்தை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கான இடத்தை அடையாளம் காணும் பணியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 'ரிமோட் சென்சிங் நிறுவனம்' களம் இறங்கியது.

அது, செயற்கைக்கோள் அடிப்படையிலான புவியியல் படங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. மேலும் ஆழ்கடல் தொடர்பான ஆய்வுகளும் செய்யப்பட்டன. அதில், பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்காக கடலின் உள்ளே குறைந்தபட்சமாக 6 மீட்டர் அளவுக்கு ஆழம் இருக்கும் இடம் போதுமானதாக கண்டறியப்பட்டது. அது கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தொலைவில் இருந்தது. இதையடுத்து நினைவுச்சின்னம் அமைக்க உத்தேசித்துள்ள இடம் உறுதி செய்யப்பட்டது.

நினைவுச்சின்னம் அமைப்பதற்கு, கூவம் முகத்துவாரம் அருகே உள்ள பகுதி, மறைந்த முதல்-அமைச்சர்கள் நினைவிடங்களின் பின்புறம் உள்ள பகுதி மற்றும் கலங்கரை விளக்கம் அருகே உள்ள இடம் (லூப் சாலை) என 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. முதலாவதாக உள்ள இடம் கூவம் முகத்துவாரத்தை ஒட்டி இருந்ததாலும், வண்டல் மண் அதிகமாக இருந்ததாலும் நிராகரிக்கப்பட்டது. இதேபோல, கலங்கரை விளக்கம் அருகே உள்ள இடம் என்பதாலும், ஆமைகள் இனபெருக்கம் செய்யும் இடம் என்பதாலும் லூப் சாலை அருகே தேர்வு செய்யப்பட்ட இடமும் கைவிடப்பட்டது.

முதல்-அமைச்சர்களின் நினைவிடங்களின் அருகே உள்ள இடம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் போக்குவரத்து நெரிசல் இன்றி சுமுகமாக சென்று வருவதற்கு வசதியாக இருந்ததன் காரணமாக 2-வது இடம் தேர்வு செய்யப்பட்டது.

அரசு திட்டமிட்டுள்ளப்படி, நினைவுச் சின்னத்துக்கான செயல்பாடுகள் நடந்தால், அதற்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் முடிந்து 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பேனா சினைவுச்சின்னம் திறக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்