நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மருத்துவக்கல்வி வணிகமயமாவதை தடுக்க நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்றும், மருத்துவப்படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
இந்தியாவில் முதுநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை எழுதியவர்கள் அனைவருமே, கோடிக்கணக்கில் பணம் இருந்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்பதுதான் இதன் பொருளாகும்.
நடப்பாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கத்திலும், 14 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், 13 எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இது மருத்துவக்கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தாது, கண்டிப்பாக குறைக்கும். இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
ரத்து செய்யவேண்டும்
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2010-ம் ஆண்டு முதன்முறையாக அறிவிக்கப்பட்டபோது, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதை தடுப்பதும், மருத்துவக்கல்வியின் தரத்தை உயர்த்துவதும் தான் அதன் நோக்கங்கள் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அவை இரண்டுமே நடக்கவில்லை.
மாறாக தனியார் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள் தகுதியைப் பற்றி கவலைப்படாமல் கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதற்கு துணை செய்வதற்காகவே நீட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது இப்போது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவக்கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக்கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதே உண்மை. எனவே, மருத்துவப்படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.