மத்திய அரசு திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைகிறது
வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதால், மத்திய அரசு திட்டங்கள் பயனாளிகளை நேரடியாக சென்றடைவதாக மத்திய இணை மந்திரி வி.கே.சிங் கூறினார்.
வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதால், மத்திய அரசு திட்டங்கள் பயனாளிகளை நேரடியாக சென்றடைவதாக மத்திய இணை மந்திரி வி.கே.சிங் கூறினார்.
முழுமையாக சென்றடைகிறது
கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் மத்திய விமான போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை இணை மந்திரி வி.கே.சிங் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். வேப்பங்கநேரியில் நடைபெற்ற இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசினார். அப்போது தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் மக்கள் பணத்தை அவர்களிடம் இருந்து பறித்து, தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு பரிசு கொடுப்பதுபோல் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறார்கள். மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்களை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதால் அது பயனாளிகளை முழுமையாகச் சென்று அடைகிறது.
ராணுவ வீரர்கள் நம்நாட்டை இரவு பகல் பாராமல் காத்து வருகின்றனர். நாட்டு மக்கள் நலன், ஏழ்மை ஒழிப்பை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
திண்ணையில் அமர்ந்து
தொடர்ந்து கீழ் ஆலத்தூரில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், பாரதப் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டைத் திறந்து வைத்தார். அப்போது அந்த வீட்டில் நடைபெற்ற ஒரு குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள 60 பயனாளிகளுக்கு அஞ்சலக சேமிப்பு அட்டைகளை வழங்கினார்.
அப்போது மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்களை விளக்கி, அவை பயனாளிகளை சென்றடைகிறதா? என்று கேட்டறிந்தார். கவசம்பட்டு பகுதியில் திண்ணையில் அமர்ந்து ஊர் மக்களிடம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நரேந்திரன், மாநில செயலாளர் கோ.வெங்கடேசன், ஒன்றிய தலைவர் ஈஷாசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் வி.ஆர்.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.