"மத்திய அரசு ஈ.பி.எஸ்-ஐ மட்டுமே அங்கீகரித்துள்ளது": ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு பேட்டி

மத்திய அரசு எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமே அங்கீகரித்துள்ளது என எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.;

Update: 2022-07-23 11:25 GMT

கோப்புப்படம் 

மதுரை,

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு தி.மு.க. அரசு உடந்தையாக இருந்தது. ஓ.பி.எஸ்.சிடம் பலகட்ட பேச்சுவார்த்தையை மூத்த நிர்வாகிகள் நடத்தினர், அதை உதாசீனப்படுத்தி தூக்கி எறிந்தார் ஓ.பன்னீர்செல்வம். தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்தை கேட்காமல் இருந்ததால் தற்போது அவர் அரசியலில் அனாதையாகி விட்டார்.

உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என நிரூபிக்கும்வகையில் 75 மாவட்டங்களிலும் வருகிற 25-ந்தேதி தி.மு.க. ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற உள்ளது. தேனியில் 26-ந்தேதி போராட்டம் நடைபெறுகிறது. வரும் காலங்களில் துரோகத்திற்கும், எதிரிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

குடியரசு தலைவர் பிரிவு உபசார விழாவிலும், குடியரசு தலைவர் பதவி ஏற்பு நிகழ்விலும் அ.தி.மு.க.வின் ஒற்றை முகமாக, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக கலந்து கொள்ள மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை கோடி கட்சி தொண்டர்களின் இதயமாக விளங்கும் தலைமை கழகத்தை காலணியால் உதைத்தனர். தி.மு.க.வும் இதற்கு உடந்தையாக இருந்து வருவாய்த்துறை மூலம் சீல் வைத்தனர். இந்த வன்முறையால் தொண்டர்கள் கண்ணீர் விட்டனர். தொண்டர்களின் கண்ணீரை துடைக்கும் வண்ணம் சீல் அகற்றி ஈ.பி.எஸ்.சிடம் தலைமை கழகம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவாக உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்