சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது

சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று திருமுருகன் காந்தி கூறினார்.

Update: 2022-12-06 17:40 GMT

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் வழிபாட்டுரிமை பாதுகாப்புக்கான ஆர்ப்பாட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடந்தது. மாவட்ட தலைவர் நிஜாமுதின் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ரமிஸ் அகமத், அப்துல் மண்ணான், நூருல்லா முகமது ராகிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஆலியார் சுல்தான் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, த.மு.மு.க. மாநில செயலாளர் வேலூர் ஏஜாஸ் அகமத் மற்றும் பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் திருமுருகன் காந்தி பேசுகையில், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு கிடையாது என்பது 100 சதவீதம் உண்மை. மத்திய அரசாங்கம் என்பது மதசார்பற்ற அரசாங்கமாக திகழ வேண்டும்.

விடுதலைக்காக போரிட்ட மகாத்மா காந்தியடிகள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு பாபர் மசூதிக்குள் நுழைந்து ராமர் சிலையை வைத்தார்கள் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர். இந்த இரு சம்பவங்கள் தான் இந்தியாவின் வரலாற்றை வேறு திசையில் நிறுத்தி கொண்டு இருக்கிறது. இந்திய நாடு ஜனநாயக சமத்துவ நாடாக இருக்க ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை.

டிசம்பர் 6-ந் தேதியை பதற்றமான நாளாக இந்திய அரசு வேண்டும் என்றே உருவாக்கி வருகிறது. இந்தியாவை பதற்றமாக வைப்பது ஆர்.எஸ்.எஸ்.தான். இஸ்லாமியர்கள் அல்ல என்று கூறினார்.

இதில், த.மு.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்