பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது; மத்திய இணை மந்திரி பிரதீமா பவுமிக் பேட்டி

பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது என்று மத்திய இணை மந்திரி பிரதீமா பவுமிக் கூறினார்.

Update: 2022-10-07 20:23 GMT

ஜெயங்கொண்டம்:

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக...

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை இணை மந்திரி பிரதிமா பவுமிக் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்வரும் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலை, குடிநீர் உள்ளிட்ட நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், சமூக பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமுதாய முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் மாநில அரசும் செயல்பட வேண்டும். இது குறித்து மாநில அரசு அனைத்து மட்டத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரிஆனந்த்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அங்கன்வாடி கட்டிடம் திறப்பு

மேலும் தா.பழூர் அருகே அணைக்குடம் ஊராட்சியில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிட திறப்பு நிகழ்ச்சிக்கு மத்திய இணை மந்திரி பிரதிமா பவுமிக் தலைமை தாங்கி, கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அணைக்குடம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பேசினார்.

அவர் பேசுகையில், தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பாக வழங்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்கள் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்க விரும்பினால், அவர்களுடைய கல்விச்செலவை முழுமையாக மத்திய அரசே ஏற்கிறது, என்றார்.

ஆய்வு

இதையடுத்து தொழில் கடன் கேட்டு அவரிடம் மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பம் அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னதாக அணைக்குடம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா இளையராஜா வரவேற்று பேசினார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை முதன்மை செயலாளர் மிலிந்த்ராம்தேகே முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், அன்புசெல்வன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் அய்யப்பன், மாவட்ட செயலாளர் இளையராஜா உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே அரியலூர் பெரியார் நகரில் ஒருங்கிணைந்த மதுபோதை மறுவாழ்வு மையத்தை மத்திய இணை மந்திரி பிரதிமா பவுமிக் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்