மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகரில் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் வழிகாட்டுதலின்படி விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஸ்டாப் யூனியன் சார்பில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் வேல்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வெள்ளைச்சாமி, தென்னரசு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 1.1.2021 முதல் வழங்க வேண்டிய மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி 20சதவீத ஊதிய உயர்வினை விரைந்து வழங்க வேண்டும். ஊதிய உயர்வை தரம் பிரிக்க கூடாது. மாநில கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளையும் இணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி என உருவாக்க வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பதவி உயர்வில் 3-க்கு 1 என்ற நடைமுறையினை நீக்க வேண்டும். வணிக வங்கிகளில் உள்ளது போல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட தலைவர் சசிகுமார் வரவேற்றார். முடிவில் காளீஸ்வரி நன்றி கூறினார்.