மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் வேலன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். இணை செயலாளர்கள் தமிழ்குமரன், செந்தில்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், சம்பள உயர்வு கோரிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் மாநில பதிவாளர் தீர்வு காண வேண்டும். பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு கருணை ஓய்வூதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.