மரப்பாலம் சிமெண்டு பாலமாக மாற்றப்படுமா?

திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் - கொத்தமங்கலம் ஊராட்சிகளை இணைக்கும் மரப்பாலம் சிமெண்டு பாலமாக மாற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்

Update: 2023-05-24 19:00 GMT

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் - கொத்தமங்கலம் ஊராட்சிகளை இணைக்கும் மரப்பாலம் சிமெண்டு பாலமாக மாற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மரப்பாலம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் ஊராட்சி உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வரம்பியத்தில் இருந்து மற்றும் விட்டுக்கட்டியை பகுதியில் இருந்து பள்ளங்கோவில் பகுதிக்கு செல்வதற்கு ஆற்றங்கரையின் வழியாக செல்ல வேண்டும். மேலும் கொத்தமங்கலம் ஊராட்சியை இணைக்கும் முள்ளி ஆற்றின் குறுக்கே மரப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

சிமெண்டு பாலம்

இதன் வழியாகத்தான் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் மக்கள், மருத்துவமனைக்கு செல்லும் முதியவர்கள் சென்று வர வேண்டும். இந்த மரப்பாலம் சேதமடைந்து மிகவும் ஆபத்தாக உள்ளதால் இதை அகற்றிவிட்டு புதிய சிமெண்டு பாலம் கட்ட வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காயமடைய வாய்ப்பு

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

வரம்பியம் ஊராட்சி மற்றும் கொத்தமங்கலம் ஊராட்சியை இணைக்கும் இந்த மரப்பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. இதில் செல்லும் மக்கள் மிகுந்த பயத்துடன் சென்று வருகிறார்கள். குறிப்பாக இரவில் இந்த பாலம் வழியாக செல்லும் போது மக்கள் தவறி விழுந்து காயமடைய வாய்ப்பு உள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்லும் போது மரப்பாலத்தில் இருந்து தவறி விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மரப்பாலத்தை அகற்றிவிட்டு சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்