செல்போன் கோபுர உபகரணங்கள் திருட்டு
ஆத்தூர் அருகே செல்போன் கோபுர உபகரணங்கள் திருட்டு தொடர்பாக அண்ணன்- தம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
ஆத்தூர்:-
சென்னை புரசைவாக்கம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 32). இவர் தனியார் செல்போன் கோபுர நிறுவனத்தில் நிலம் கையகப்படுத்துதல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆத்தூர் புறநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டையை சேர்ந்த விவசாயி மருதமுத்து என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு தனியார் செல்போன் நிறுவன கோபுரம் அமைக்கப்பட்டது. 15 ஆண்டு ஒப்பந்தத்துடன் இந்த கோபுரம் அமைக்கப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அந்த செல்போன் நிறுவன கோபுரம் இயங்கவில்லை. இந்த செல்போன் கோபுரத்தை தற்போது எங்கள் நிறுவனம் வாங்கி கையகப்படுத்தியது. பின்னர் அந்த செல்போன் கோபுரத்தை நான் பார்வையிட சென்ற போது அதில் இருந்த டவர் செல்ட்டர், டீசல் ஜெனரேட்டர், பேட்டரி பேங்க் ஆகிய உபகரணங்கள் திருட்டு போனது. இதன் மதிப்பு ரூ.32 லட்சம் ஆகும்.
இது குறித்து மருதமுத்துவின் மகன்கள் சண்முகம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. எனவே இந்த செல்போன் கோபுர உதிரிபாகங்கள் திருட்டு போனது தொடர்பாக சண்முகம், ராமச்சந்திரன் ஆகிய 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம். இவ்வாறு அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகாரின்பேரில், சண்முகம் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 2 பேர் மீதும் ஆத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.