பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதியிடம் செல்போன்-சிம் கார்டு பறிமுதல்

Update: 2022-10-15 10:59 GMT

நெல்லை:

பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என அடிக்கடி போலீசார் கைதிகளின் அறைகளில் சோதனை நடத்துவது வழக்கம்.

இந்தநிலையில் மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த செல்வம் என்ற பிரம்மா செல்வம் என்பவர் தனது அறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிறைத்துறை அலுவலர் வினோத் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அவரது அறையில் செல்போன் மற்றும் சிம்கார்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

இது தொடர்பாக பாளையங்கோட்டை மத்திய சிறை சூப்பிரண்டு சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். உடனே செல்போன் சிம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்த சிறைத்துறையினர் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டனை கைதி எதற்காக செல்போன் பயன்படுத்தி வந்தார்?. சிறையில் பலத்த பாதுகாப்பையும் மீறி அவரது கைக்கு செல்போன் சென்றது எப்படி? என்பது குறித்து நெல்லை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் இந்த செல்போனை பயன்படுத்தி யாரிடம் எல்லாம் பேசி உள்ளார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதே போல் மற்ற கைதிகளிடமும் செல்போன் உள்ளதா? அவர்கள் இந்த செல்போன் மூலம் வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட சிறையில் வைத்து திட்டமிட்டு உள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்