பழ வியாபாரியிடம் செல்போன் பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி பழ வியாபாரியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கொடைரோடு அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 22). இவர், திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கொழிஞ்சிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவரது கடைக்கு, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து இறங்கினர். பழங்கள் வாங்குவது போல ராஜ்குமாரிடம் பேசினர். சிறிதுநேரத்தில் அவர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால், ராஜ்குமாரின் செல்போனை பறித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நிலக்கோட்டை அருகே உள்ள ஆவரம்பட்டியை சேர்ந்த நவீன் (21), அமர்ஜோதி (21), கார்த்திக் (21) என்று தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.