செல்போன் எண், வங்கி கணக்கு இணைக்கும் பணியை 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெற செல்போன் எண், வங்கிக்கணக்கு, நில ஆவணங்களை இணைக்கும் பணியை வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-19 10:43 GMT

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெற செல்போன் எண், வங்கிக்கணக்கு, நில ஆவணங்களை இணைக்கும் பணியை வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது தவணை தொகையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கிணை இணைத்தல், ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைத்தல், நேரடி பண பரிவர்த்தனை, நில ஆவணங்களை இணைத்தல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வங்கிக் கணக்கினை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியாத விவசாயிகள் நேரடி பண பரிவர்த்தனை செய்ய முடியாதவர்கள் மற்றும் வங்கி ரீதியிலான இடர்பாடுகள் உள்ள விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று புதிய சேமிப்பு கணக்கினை தொடங்கி பயன்பெறலாம்.

கிராம தபால் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள செல்போன் மற்றும் பயோ மெட்ரிக் கருவி மூலம் ஆதாருடன் செல்போன் எண் பதிவு செய்து ஜீரோ இருப்பு கணக்கினை விவசாயிகளுக்கு உடனடியாக தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வருகிற 31-ந் தேதிக்குள்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 916 விவசாயிகளின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கப்படாமல் உள்ளதால் பயனாளிகள் உடனடியாக வங்கிக்குச் சென்று ஆதார் எண்ணை இணைக்க ேவண்டும்.

மேலும் 19 ஆயிரத்து 337 பேர் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்காமலும் உள்ளனர். இவர்கள் இ-சேவை மையம் மற்றும் தபால் நிலையங்களுக்குச் சென்று இப்பணியினை முடித்திட வேண்டும்.

700-க்கும் மேற்பட்ட நபர்கள் நேரடி பண பரிவா்த்தனைக்கான பணி முடிக்காமல் உள்ளார்கள். இவர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி அல்லது தபால் அலுவலகம் சென்று இப்பணியினை முடிக்க வேண்டும்.

3 ஆயிரத்து 810 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணைக்காமல் உள்ளார்கள். இப்பணியினை முடித்திட தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகலாம்.

மேற்படி அனைத்து பணிகளையும் வருகிற 31-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) முடித்தால் மட்டுமே பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி தொடர்ந்து தங்கள் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்