தூத்துக்குடி மாவட்டத்தில் செல்போன் கடைக்காரர்களுக்கு போலீஸ்சூப்பிரண்டு பாலாஜிசரவணன் அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய செல்போன் கடைக்காரர்களுக்கு போலீஸ்சூப்பிரண்டு பாலாஜிசரவணன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய செல்போன்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள், தங்களிடம் செல்போனை விற்பவர்கள், வாங்குபவர்களின் முகவரி ஆவணங்களை பெற்று பதிவு செய்ய வேணடும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பழைய செல்போன்
தூத்துக்குடி மாவட்டத்தில் செல்போன் திருடுபவர்கள் அதை தங்களுடையது என்று பழைய செல்போன் விற்பனையாளர்களிடம் விலைக்கு விற்று வருவதும், அதே போன்று அவர்கள் செல்போன்கள் யாருக்கு விற்கப்படுகிறது என்ற எந்தவித விவரமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதும் தெரிய வந்து உள்ளது. எனவே பழைய செல்போன் விற்பனையாளர்கள் தங்களிடம் செல்போன்களை விற்பனை செய்ய வருபவர்களிடமும், வாங்க வருபவர்களிடமும், அவர்களது புகைப்படம் மற்றும் முகவரி ஆகியவற்றை பெற வேண்டும்.
ஆவணங்கள்
அதே போன்று அவர்களின் அடையாள அட்டையான ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, அதன் நகல்களையும் வாங்கி ஒரு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அந்த பதிவேட்டடில் வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் கையொப்பம் பெற்றுக் கொண்டு செல்போன்களை வாங்கி விற்பனை செய்ய வேண்டும்.
மேலும் நாம் பயன்படுத்தும் செல்போன்களில் நமது குடும்ப புகைப்படங்கள், வங்கிக்கணக்கு உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்போம், அவற்றை விற்பனை செய்யும்போது அவற்றை அழித்து விட்டு விற்பனை செய்தாலும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை மீட்டெடுக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் பழைய செல்போன்களை விற்பனை செய்யும்போது முழுமையாக பார்மட் செய்து விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.