வியாபாரி வீட்டில் செல்போன், சிலிண்டர்கள் திருட்டு
வேலூரில் வியாபாரி வீட்டில் செல்போன், சிலிண்டர்களைதிருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 47). இவர் ஆட்டோக்களில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் தொரப்பாடியை சேர்ந்த அஸ்வின் (36), பிரபு (41) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் சத்தியமூர்த்தி கடந்த 16-ந்தேதி வேலை விஷயமாக பெங்களூருக்கு சென்றார். அப்போது அவர் வீட்டை பூட்டி விட்டு வியாபாரம் தொடர்பாக அவசரத்துக்கு தேவைப்படும் என்று சாவியை அஸ்வினிடம் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சத்தியமூர்த்தி வீடு திரும்பினார். வீட்டில் இருந்த 2 சமையல் கியாஸ் சிலிண்டர்கள், செல்போன், அலுமினிய பாத்திரங்கள் காணாமல் போயிருந்தது.
அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சத்தியமூர்த்தியிடம் பணிபுரிந்த அஸ்வின், பிரபு ஆகியோர் கூட்டு சேர்ந்து வீட்டில் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 2 கியாஸ் சிலிண்டர்கள், செல்போன், அலுமினிய பொருட்களை திருடி விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.