முன்னாள் கவுன்சிலாிடம் நூதன முறையில் செல்போன் அபேஸ்

Update: 2023-09-05 18:45 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டியில் முன்னாள் கவுன்சிலரிடம் நூதன முறையில் செல்போனை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

முன்னாள் கவுன்சிலர்

பூதப்பாண்டி அருகே உள்ள ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சொர்பின் (வயது 40). இவர் பூதப்பாண்டி பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார்.

இந்தநிலையில் இவர் நேற்று காலையில் மனைவியை வேலைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து மனைவியை பஸ்சில் ஏற்றிவிட்டு, அங்கு நின்ற நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் தனது தயாருக்கு அறுவை சிகிச்சை செய்ய ரத்தம் தேவைப்படுகிறது. இதனால் அது தொடர்பாக ஒருவரிடம் பேச வேண்டும் என சொர்பினிடம் செல்போனை கேட்டுள்ளார். அவரும் தனது ெசல்போனை அவரிடம் கொடுத்துள்ளார்.

செல்போன் அபேஸ்

செல்போனை வாங்கிய அந்த நபர் செல்போனில் பேசிக்கொண்டே மாயமாகிவிட்டார். இதையடுத்து நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த சொர்பின் செல்போனை வாங்கிய நபர் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதைதொடர்ந்து சொர்பின் நண்பரின் செல்போனில் இருந்து அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு தான் நூதன முறையில் செல்போனை மர்மநபர் அபேஸ் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சொர்பின் பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை போலீசாா் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்