செல்போன் எண்களுடன் கூடிய பதாகைகள்

Update: 2022-06-15 16:03 GMT

அனுப்பர்பாளையம்:

தொழில் நகரமான திருப்பூர் மாநகரில் குற்றங்களை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாபு உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்தி வருகின்றனர். ஆனாலும் திருட்டு, வழிப்பறி, விபத்து உள்ளிட்ட குற்ற சம்பவங்களும், ஆன்லைன் தொடர்பான குற்றங்களும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் பொதுமக்கள் அவசர தேவைக்கு உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளும் வகையில் மாநகரில் உள்ள 8 போலீஸ் நிலையங்கள் சார்பில் காவல் உதவி எண், குறுஞ்செய்தி உதவி எண் மற்றும் போலீஸ் நிலையங்களின் தொலைபேசி எண்களுடன் கூடிய பதாகைகளை அந்தந்த போலீஸ் நிலைய எல்லைகளில் போலீசார் வைத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சேவைக்கான செயலி, 112 பான் இந்தியா பாதுகாப்புக்கான செல்போன் செயலியின் பெயர்களை போலீசார் அந்த பதாகையில் இடம் பெற செய்துள்ளனர். இதேபோல் இளைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் ஆகியவற்றின் மூலமாகவும் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ளும் வகையில் வாட்ஸ்-அப் எண் மற்றும் முகவரிகளும் அதில் இடம் பெற்றுள்ளன. திருப்பூர் மாநகர் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களின் நலன் கருதி இந்த பதாகைகளை வைக்கப்பட்டுள்ளன. போலீசாரின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

----------

மேலும் செய்திகள்