உலக தாய்ப்பால் வார விழா
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவத்துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி வகுப்பறை சுவர்களில் வர்ணம் பூசுதல், கவிதை போட்டி, கதை சொல்லுதல், சலவை கட்டியில் அரசு சுகாதாரம் தொடர்பான லட்சிணைகளை உருவாக்குதல், நலக்கல்வி வழங்க தேவையான விழிப்புணர்வு சுவரொட்டிகள், கைப்பிரதிகிகள் மற்றும் விழிப்புணர்வு குறும்படம் தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர். போட்டிகளில் உருவாக்கப்பட்ட படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் ரேவதி பாலன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுரேஷ் துரை, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆறுமுகம், சிறுநீரக துறை தலைவர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
மேலும் சமூகம் சார்ந்த மருத்துவத்துறை சார்பில் மருத்துவ கல்லூரி மாணர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் மூலமாக ஆஸ்பத்திரியில் மகப்பேறு வெளி நோயாளிகள் பகுதி, கர்ப்பிணி தாய்மார்கள் கவனிப்பு பகுதி, பிரசவத்துக்கு பின்பு தாய்மார் கவனிப்பு பகுதி ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. குழந்தைகளுக்கு பிறந்த 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுத்தல், 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுத்தல், பணிபுரியும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சவால்கள் போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறை தலைவர் கிறிஸ்டா தலைமையில் பேராசிரியர்கள் சார்லஸ் பொன் ரூபன், சிவகாமி, கிருஷ்ணபிரசாத், ஆஸ்மி, ஷமீமா, பூமணி சாமுவேல், அலீமா பானு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.