சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சி நடந்தது.

Update: 2023-06-21 16:33 GMT

சர்வதேச யோகா தினம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு யுவகேந்திரா, திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்கம் ஆகியவை சார்பில் சர்வதேச யோகா தின விழா மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி வரவேற்றார். மாவட்ட யோகாசன சங்க தலைவர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.

இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். இதில் மாவட்ட யோகாசன சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆயுதப்படை மைதானம்

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் நிர்வாகம், திண்டுக்கல் வேலம்மாள் பள்ளி ஆகியவை இணைந்து திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் யோகா தின விழாவை கொண்டாடியது.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யோகாசன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி தலைவர் முத்துராமலிங்கம், இயக்குனர்கள் சசிகுமார், கீதாஞ்சலிசசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வேலம்மாள் பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். இதில் பள்ளி முதல்வர் திலகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அரசு மருத்துவமனை

திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள யோகா பயிற்சி மையத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ரபீக் அகமது முன்னிலை வகித்தார். இதையொட்டி அனைவரும் யோகா விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகளுக்கு யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அரசு மருத்துவக்கல்லூரி அனைத்து நிர்வாகிகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

யோகாசன விழிப்புணர்வு

சர்வதேச யோகா தினத்தையொட்டி பழனி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரியில் மாணவர்கள் யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதன்படி பழனியாண்டவர் கலை-கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் பல்வேறு ஆசனங்களை செய்தனர்.

இதேபோல் பழனி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி கருணாநிதி தலைமையில் யோகாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதன்மை சார்பு நீதிபதி ஜெயசுதாகர், உரிமையியல் நீதிபதி திருஞானசம்பந்தம், ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் கலைவாணன், செல்வமகேஸ்வரி மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து யோகா ஆசிரியர் முருகன் யோகாசனம் செய்வதன் அவசியம், நன்மைகள் குறித்து பேசினார்.

புகைப்பட கண்காட்சி

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் 9 ஆண்டு சாதனை, சர்வதேச யோகா தினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை தொடர்பாக ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் புகைப்பட கண்காட்சி கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று மாலை தொடங்கியது.

இந்த கண்காட்சியை மாவட்ட வன அலுவலர் திலிப் திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக மக்களை ஒரே குடும்பமாக கருதி, எல்லோரும் எல்லா நலமும் பெற வேண்டும் என்ற ஒப்பற்ற நோக்கில், சர்வ ரோக நிவாரணியான யோக கலையை இந்தியா உலகிற்கு பெருங்கொடையாக வழங்கியுள்ளது.

ஒவ்வொரு தனிமனிதரும் தங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு யோகா பெரிதும் உதவுகிறது. குறிப்பாக மாணவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் யோகாவை கற்று அன்றாட வாழ்வில் கடைபிடித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

பாராட்டு சான்றிதழ்

முன்னதாக சர்வதேச யோகா தினம், லைப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் குறித்த விழிப்புணர்வு கையேடுகளை மாவட்ட வன அலுவலர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல இயக்குனர் காமராஜ், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை இயக்குனர் ராஜம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மரியதாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இதேபோல் கொடைக்கானல் கோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் நீதிபதி கார்த்திக் தலைமையில் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

யோகா பயிற்சி

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழக உடற்கல்வி துறை, யோகா மையம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் சுகுமார், நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நாகமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் காந்திகிராம கஸ்தூரிபா சேவிகாஷ்ரம் சிறப்பு மேல்நிலைப் பள்ளி, சாமியார்பட்டி இந்து உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என 275 பேர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் பிரம்ம குமாரிகள் ராஜயோக தியான மையத்தை சேர்ந்த 11 பேர் பங்கேற்றனர். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பொதுவான யோகா நெறிமுறைகளுடன் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வரைபட கண்காட்சி

திண்டுக்கல் தாமரைப்பாடி புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் மேரி பிரமிளா சாந்தி தலைமை தாங்கினார். செயலர் அருள்தேவி முன்னிலை வகித்தார்.

இதில் திண்டுக்கல் அறிவு திருக்கோவில் அமைப்பின் யோகா பயிற்சியாளர் சங்கீதா மற்றும் பேராசிரியர்கள் மாணவிகளுக்கு யோகா பயிற்சிகள் அளித்து அதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். அதைத்தொடர்ந்து யோகா விழிப்புணர்வு மற்றும் வரைபட கண்காட்சி நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் கல்வி இயக்குனர் மேரி ஜோன்ஸ்பின் இசபெல்லா, உடற்கல்வி பேராசிரியர்கள் சோபியா சகாயராணி, சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்