தரங்கம்பாடிக்கு சீகன்பால்கு வந்ததன் 316-ம் ஆண்டு கொண்டாட்டம்
தரங்கம்பாடிக்கு சீகன்பால்கு வந்ததன் 316-ம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பொறையாறு:
தரங்கம்பாடிக்கு சீகன்பால்கு வந்ததன் 316-ம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மதபோதகராக வந்த சீகன்பால்கு
ஜெர்மனி நாட்டை சேர்ந்த பார்த்தலோமஸ் சீகன்பால்கு கிறிஸ்தவ மதபோதகராக 1706-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரைக்கு கப்பல் மூலம் வந்தடைந்தார். அவரது நோக்கம் கிறிஸ்தவ மத கொள்கையை பரப்புவதாக இருந்தாலும், தமிழகம் வந்த சிறிது காலத்திலேயே இங்குள்ள மக்களிடம் பழகி அவர்களின் ஆதரவை பெற்றார்.
முதல் அச்சு எந்திரம்
5 ஆண்டுகளுக்குள் தமிழை முறையாக கற்றுக் கொண்ட சீகன்பால்கு, இந்தியாவின் முதல் அச்சு எந்திரத்தை தரங்கம்பாடியில் நிறுவி, புதிய ஏற்பாடு, பைபிள் ஆகியவற்றை முதன் முதலில் 1715-ம் ஆண்டு தமிழில் வெளியிட்டார். சீகன்பால்கு. 1719-ம் ஆண்டு, தனது 37-வது வயதில் உயிரிழந்தார். அவரது உடல் அவர் தரங்கம்பாடியில் கட்டிய தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்திறங்கிய தினமான ஜூலை 9-ந்தேதி திருச்சபைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருச்சபைக்கு நன்றி தெரிவிக்கும் நாள்
அதன்படி சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்திறங்கிய 316-ம் ஆண்டு தினமான நேற்று திருச்சபைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக கொண்டாடப்பட்டது. சீகன்பால்கு கட்டிய புதிய எருசலேம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
பின்னர் தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலய சபை குரு சாம்சங் மோசஸ் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு ஆயர் நவராஜ் ஆபிரகாம், பொறையாறு பெத்லேகம் ஆலய ஆயர் ஜான்சன் மான்சிங், பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன், சீகன்பால்கு ஆன்மிக மன்ற இயக்குனர் ஜஸ்டின் விஜயகுமார் ஆகியோர் தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள சீகன்பால்கு நினைவு சின்னத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தொடர்ந்து ராஜ வீதி, ராணி வீதி சந்திக்கும் இடத்தில் உள்ள சீகன்பால்குவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் உள்ள சபை குருக்கள், பள்ளி கல்லூரி, ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்