பல்லடம் பஸ் நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்க நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம்
பல்லடம் பஸ் நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்க நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம்
பல்லடம்
பல்லடம் பஸ் நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்க நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி கூட்டம்
பல்லடம் நகராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். இதில் துணைத்தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-
ராஜசேகரன் (2-வதுவார்டு) : பல்லடம் பஸ் நிலையத்திற்குள் இரவு வேளையில் பஸ்கள உள்ளே வந்து செல்வதில்லை. பஸ் நிலைய பொது கழிப்பிடம் பராமரிப்பு செய்ய வேண்டும். சேடபாளையம் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். சேடபாளையம் மயானத்திற்கு நடைபாதை கற்கள் அமைக்க வேண்டும்.
கனகுமணி (7-வதுவார்டு) : ராயர்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பச்சாபாளையத்தில் மின் மயான திட்டத்தை பொதுமக்கள் எதிர்ப்பதால், நானும் எதிர்க்கிறேன். நகராட்சி சுதந்திர தின விழா அழைப்பிதழில் கவுன்சிலர்கள் பெயர் போடவில்லை. இனி வரும் காலங்களில் நகராட்சி விழா, நிகழ்ச்சிகளில் கவுன்சிலர்கள் பெயர் போட வேண்டும். அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகள் பொருத்த வேண்டும்.
ருக்மணி (16- வது வார்டு) பனப்பாளையத்தில் பழனி வீதி, ராமையா வீதியில் கான்கிரீட் ரோடுகள் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். ரங்கசாமி வீதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு கையுரை உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும்.
வழித்தடம்
ஈஸ்வரமூர்த்தி (6-வதுவார்டு) : நகராட்சி கூட்டம் மாதம் தோறும் நடத்த வேண்டும். வடுகபாளையம் குட்டை பகுதியில் தனியாருக்கு வழித்தடம் விடக் கூடாது. இதுகுறித்து தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். நிலம் சர்வே செய்து வேண்டும். ராயர்பாளையம் பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு பிரதான குழாயில் இருந்து நேரடியாக தண்ணீர் ஏற்ற வேண்டும்.சக்திநகர், அபிராமி நகர் பகுதியில் பற்றாக்குறையாக வருகிறது. பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
சவுந்தர்ராஜன் (4-வது வார்டு) 4-வது வார்டு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அந்தப் பகுதியிலேயே மேல்நிலை குடிநீர் தொட்டி இருந்தும் பற்றாக்குறை நிலவுகிறது. கழிவுநீர் கால்வாய் அமைக்க பல தடவை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை.
சுகன்யா ஜெகதீஷ் (8-வது வார்டு) பச்சாபாளையம் மந்திரி வீதியில் புதிய குடிநீர் பகிர்மானக் குழாய் அமைத்து தர வேண்டும். பட்டேல் வீதியில் சிறுபாலம் அமைத்து தர வேண்டும் தெரு நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமரா
பாலகிருஷ்ணன் (1-வது வார்டு): வீடு மற்றும் கட்டடங்கள் கட்டி புதிய வரி விதிப்பு செய்யும் போது அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மக்கள் குறைகளை நாங்கள் தான் நிர்வாகத்திடம் தெரிவிக்கிறோம்.எனவே தகவல் தெரிவிக்க வேண்டும். நாராணபுரம் பிரிவில் இருந்து சேடபாளையம் வரை மங்கலம் சாலையில் புதிய தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்லடம் பஸ் நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும். குடிநீர் பணியாளர்களுக்கு தினசரி ரூ.501 வீதம் கணக்கிட்டு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் ரூ.593 ஆக ஊதியம் உயர்த்தி வழங்கவும், நகராட்சியில் காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப வேண்டுதல், மங்கலம் சாலை மற்றும் வடுகபாளையம் ஸ்ரீ நகர் பகுதியில் தலா 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுவதன் மூலம் வார்டு எண் 6,7,8,9 மற்றும் 17,18 ஆகிய வார்டுகளில் விநியோக்கப்படும் குடிநீரின் இடைவெளியை 2 நாட்களுக்கு ஒரு முறையாக வினியோக்க முடியும்.
புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ரூ.1.20 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. கொசவம்பாளையத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ஒப்படைப்பு செய்வதற்கு தடையின்மை சான்று வழங்க ஆட்சோபனை இல்லை உள்ளிட்ட 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கொசவம்பாளையம் சாலையில் சுகாதார நிலையம் அமைக்க வேண்டாம். அந்த இடத்தில் நகராட்சி சார்பில் திருமண மண்டபம் அமைக்க வேண்டும் எனக் கூறி சசிரேகா, ஈஸ்வரி (பா.ஜ.க.) கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து பின்னர் கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டனர்.
---
நகராட்சி கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.