சி.சி.டி.என்.எஸ். வலைத்தளத்தில் கைதிகளின் புகைப்படத்தை தவறாமல் பதிவேற்ற வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

தேனி மாவட்டத்தில் கைதிகளின் புகைப்படத்தை சி.சி.டின்.எஸ். வலைத்தளத்தில் தவறாமல் பதிவேற்ற வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

Update: 2022-08-16 16:38 GMT

தமிழக போலீஸ் துறையில் அனைத்து பிரிவுகளிலும் வலைத்தளம் மூலமாக வழக்குப்பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் முறையில் (சி.சி.டி.என்.எஸ்.) பிரத்யேக வலைத்தளம் வாயிலாக வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களின் மீது தமிழகத்தில் வேறு ஏதாவது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதா? என்பதையும் இந்த வலைத்தளம் மூலம் போலீசார் எளிதில் கண்டறிய முடியும். இந்த வலைத்தளத்தில் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்ற வழக்குகளில் கைதாகும் நபர்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படும். ஆனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இந்த வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்வதில் தாமதம் உள்ளது.

அந்த வகையில் தேனி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 36 சதவீதம் பேரின் புகைப்படங்கள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களின் புகைப்படங்களை அதே நாளில் சி.சி.டி.என்.எஸ். வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்