சாத்தான்குளம் வழக்கில் கூடுதலாக 400 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கூடுதலாக 400 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.
மதுரை,
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை சம்பவத்தில் சிபிஐ தரப்பில் கூடுதலாக 400 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை மதுரை கூடுதல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஏற்கெனவே 2,027 பக்கங்கள் அடங்கிய முதலாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது இரண்டாவதாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
குற்றப்பத்திரிகையின் நகல் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 9 காவலர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் ஜெயராஜை சாத்தான்குளம் காவல்துறையினர் அழைத்துச்சென்ற வீடியோ பதிவுகள் மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் அழைத்துச்சென்றபோது அவர்கள் அனிந்திருந்த ரத்தக்கறை படிந்த ஆடைகளை மாற்றியது போன்ற வீடியோ ஆதாரங்கள் உள்ளது. மேலும் இந்த வீடியோ பதிவுகளை தடவியல் துறையால் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை போன்றவை இதில் அடங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையில் பென்னிக்ஸ் ஏற்கெனவே பேசிய செல்போன் அழைப்புகள் போன்றவை இடம்பெற்றது. இதையடுத்து வழக்கின் விசாரனையை நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.