ராமஜெயம் கொலை வழக்கில் ஈரோட்டில் 70 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக ஈரோட்டில் 70 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

Update: 2022-06-01 21:26 GMT

ஈரோடு:

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக ஈரோட்டில் 70 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ராமஜெயம் கொலை

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சி தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மர்மநபர்களால் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த தொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது. மேலும் கொலையாளிகள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக காக்கப்படும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்து உள்ளனர்.

இந்தநிலையில் கொலை நடந்தபோது சுங்கச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஒரு காரில் கொலையாளிகள் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த காரை கண்டறிந்தால், கொலையாளிகளின் பற்றிய விவரங்களை கண்டுபிடித்து விடலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கார் உரிமையாளர்கள்

கொலை நடந்தபோது சந்தேகத்துக்கு உள்ளான கார்களை பயன்படுத்திய உரிமையாளர்களின் பட்டியலை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர். இதையடுத்து ஒவ்வொரு உரிமையாளர்களின் முகவரிக்கும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது கொலை நடந்த ஆண்டில் கார் திருட்டுபோய் உள்ளதா? வேறு யாருக்கும் விற்பனை செய்யப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் கார்களை 2012-ம் ஆண்டில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வந்தது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அந்த கார் உரிமையாளர்களை நேரில் சந்தித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் 60 சதவீத உரிமையாளர்களிடம் விசாரணை முடிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்