காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு பவானியில் 50 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானியில் 50 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

Update: 2022-08-28 21:15 GMT

பவானி

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானியில் 50 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

ஆர்ப்பரிக்கும் காவிரி

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் அங்கிருந்து அதிக அளவு தண்ணீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. நேற்று வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை தன் முழு கொள்ளளவான 120 அடியில் நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, பவானி, ஈரோடு கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் காவிரி இருகரைகளையும் தொட்டபடி ஆர்ப்பரித்து செல்கிறது.

வீடுகளை சூழ்ந்தது

பவானியில் ஏராளமான குடியிருப்புகள் காவிரி கரையை ஒட்டியுள்ளது. அதனால் பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி வீதி, காவேரி நகர் ஆகிய பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை நேற்று தண்ணீர் சூழ்ந்தது.

இதேபோல் பவானி தினசரி மார்க்கெட் அருகே உள்ள பசுவேஸ்வரர் வீதியில் 2 வீடுகளையும், பழைய பஸ் நிலையம் பூக்கடை அருகே உள்ள பாலக்கரை பகுதியில் 17 வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது இதனால் அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ முகாம்

பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பவானி தாசில்தார் முத்துக்கிருஷ்ணன், பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் ஆகியோர் சென்று பார்த்து தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்

அதேபோல் இல்லம் தேடி மருத்துவ குழுவினர் பவானியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தி சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகிறார்கள்.

அறிவிப்பு

இதேபோல் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி சார்பில் ஆற்றங்கரையோரம் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது என்று ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள பவானி புதிய பஸ் நிலையம், அருகே உள்ள நேதாஜி நகர், காவிரி நகர், காவிரி வீதி, தினசரி மார்க்கெட் அருகே உள்ள பசுவேஸ்வரர் வீதி, பவானி பழைய பாலம் அருகே உள்ள பாலக்கரை ஆகிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் வந்து தங்கிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்