மலைவாழ் மக்கள் கொண்டாடிய காளைமாடு வழிபாடு திருவிழா

தண்டராம்பட்டு அருகே காளைமாடு வழிபாடு திருவிழாவை மலைவாழ் மக்கள் கொண்டாடினர். இதனை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.

Update: 2022-06-05 17:35 GMT



தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகே காளைமாடு வழிபாடு திருவிழாவை மலைவாழ் மக்கள் கொண்டாடினர். இதனை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.

மலைவாழ் மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த புளியம்பட்டி மலை கிராமம் உள்ளது. இந்த பகுதியை சுற்றி 18 சிறிய மலை கிராமங்கள் உள்ளன. கல்வராயன் மலைத்தொடர் ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் மலைவாழ் மக்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள்.

இவர்கள் காளை மாட்டை தங்கள் தெய்வமாக வணங்கி வருகிறார்கள். இந்த காளை மாட்டிற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை விழா எடுத்து வழிபடுவது வழக்கம்.

காளைமாடு வழிபாடு திருவிழா

இந்த விழா கடந்த 3 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. விழாவையொட்டி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ கரிய ராமர் கோவிலின் வெளியே 1,000 தேங்காய் உடைக்கப்பட்டு காளை மாடு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ கரிய ராமர் கோவில் உள்ளே காளை மாடு அலங்கரித்து அழைத்து செல்லப்பட்டு சுவாமியை வழிபட்டனர்.

பின்னர் 18 மலை கிராமங்களுக்கும் காளைமாட்டை வழிபாட்டிற்காக அழைத்துச் சென்றனர். மேளதாளம் முழங்க மலர்தூவி காளை மாட்டை மலை கிராம மக்கள் வழிபட்டனர். அதன் பின்னர் கோவில் வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இந்த திருவிழாவை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் எங்கும் பார்த்தாலும் பக்தர்களின் தலையாகவே காட்சியளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்