போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் பிடித்து அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2023-05-13 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தென்பாதி, மயிலாடுதுறை சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தேர் மேலவீதி, வடக்குவீதி, பிடாரி வடக்கு வீதி, ஈசானிய தெரு, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி, ரயில்வே ரோடு, சிதம்பரம் சாலை, தாடாளன் கோவில், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையிலேயே எப்போதும் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருக்கும்.இந்த பகுதி சாலைகளில் கால்நடைகள் குறுக்கும் நெடுக்குமாக செல்கிறது. இது போக்குவரத்துக்கு பெறும் இடையூறாக உள்ளது. மேலும் சாலையில் செல்வோரை முட்டி கீழே தள்ளுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. மேலும் சாலையில் செல்லும் கால்நடைகள் திடீரென சாலையின் குறுக்கே செல்வதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் கால்நடைகள் படுத்து கிடப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் செல்லும் போது கால்நடைகள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகர் பகுதியில் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் கால்நடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்