கேட்டரிங் உரிமையாளரை தாக்கி 6 பவுன் நகை பறிப்பு
கேட்டரிங் உரிமையாளரை தாக்கி 6 பவுன் நகை பறித்த தாய், மகன் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 2-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி கவிதா (வயது 37). இவர்களின் மகன் பாலாஜி (22). இவர்கள் இருவரும் கேட்டரிங் நடத்தி வரும் சென்னையை சேர்ந்த மணிவண்ணனை (51) ஆர்டர் தருவதாக கூறி, தங்கள் வீட்டுக்கு அழைத்துள்ளனர். அதை நம்பி, மணிவண்ணன் கவிதாவின் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது கவிதா தனது மகனுடன் சேர்ந்து, மணிவண்ணனிடம் ரூ.5 ஆயிரம் கமிஷன் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த தாயும், மகனும் மணிவண்ணனை வீட்டில் உள்ள ஒரு அறையில் தள்ளி பூட்டியுள்ளனர். பின்னர், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி, 1 பவுன் மோதிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, அவரை விரட்டிவிட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய மணிவண்ணன் இதுகுறித்து உறையூர் போலீசில் புகார் செய்தார். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதா மற்றும் அவருடைய மகன் பாலாஜி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.